அதிகாரம் 1

1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:
2 ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
3 அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.
4 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
6 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
7 ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
9 கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.
10 பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
11 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
12 அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.
13 கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர் நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.
14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.
15 இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
16 அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.
17 ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
18 இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 2

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
6 என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
7 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
8 கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
9 ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
11 எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
12 வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
14 இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?
15 பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
16 நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
17 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?
18 இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?
19 உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20 பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
21 நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
22 நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
23 நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
24 வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.
25 உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால் நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.
26 திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.
27 அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.
28 நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
29 என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
31 சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
32 ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
33 நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34 உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
35 ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்.
36 நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
37 நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.
அதிகாரம் 3

1 ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
3 அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
4 நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
5 சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
6 யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
7 அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
8 சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
9 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
10 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
12 நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
13 நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,
15 உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.
18 அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,
19 நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லையென்று திரும்பவும் சொன்னேன்.
20 ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
22 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்
23 குன்றுகளையும் திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.
24 இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.
25 எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.
அதிகாரம் 4

1 இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
2 நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
3 யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
5 தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.
6 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள், நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.
7 உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
8 இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
9 அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.
11 வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
12 இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களோடே நியாயம் பேசுவேன்.
13 இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.
14 எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.
15 தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது.
16 ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
17 அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
19 என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
20 நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
21 நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
24 பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
25 பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
26 பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
27 தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
29 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
30 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.
31 கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
அதிகாரம் 5

1 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
2 அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.
3 கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
4 அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
5 நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
6 ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
7 இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள்பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்
8 அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
9 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
11 இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
13 தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
15 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
16 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.
17 அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
18 ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
19 எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.
20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.
24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
26 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
27 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
28 கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
29 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?
அதிகாரம் 6

1 பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
2 செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன்.
3 மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,
4 அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;
5 எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
6 சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
7 ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.
8 எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
9 திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
10 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
11 ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
12 அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
14 சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
15 அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
17 நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
18 ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
19 பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
20 சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
21 ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
22 இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
23 அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கமறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
24 அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.
25 வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
26 என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
27 நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
28 அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
29 துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
30 அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
அதிகாரம் 7

1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
2 நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
3 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.
4 கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.
5 நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,
6 பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,
7 அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.
8 இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
9 நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,
10 பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?
11 என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
13 நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,
14 என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.
15 நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.
17 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?
18 எனக்கு மனமடிவுண்டாக அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகுபொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
19 அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20 ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
21 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால் உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.
22 நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும்,
23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
24 அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.
25 உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.
26 ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.
27 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.
28 ஆகையால் தங்கள் தேவனாகியகர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளமலும் இருக்கிற, ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.
29 நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.
30 யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தித் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.
31 தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.
32 ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
33 இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.
34 நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.
அதிகாரம் 8

1 அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து,
2 அவர்கள் நேசித்ததும், சேவித்ததும்,பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.
3 இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
4 நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப்போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
5 ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
6 நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; யுத்தத்துக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள்.
7 ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
8 நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.
9 ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது?
10 ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,
11 சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
12 தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
14 நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
15 சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
16 தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
17 மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.
19 இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.
20 அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
21 என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
22 கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
அதிகாரம் 9

1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
2 ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
3 அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
5 அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
6 கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
8 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.
9 இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
11 நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
12 இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
13 நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,
14 தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
16 அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
17 நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18 அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரிசொல்லக்கடவர்கள்.
19 எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
20 ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
21 வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
22 மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.
23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,
26 எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 10

1 இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:
2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
3 ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
5 அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
7 ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
8 அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
9 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
15 அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
17 அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள்.
18 இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
20 என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.
21 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
22 இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.
23 கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
24 கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
25 உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.
அதிகாரம் 11

1 கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்
2 நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:
3 என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;
4 நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.
5 இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.
6 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.
7 நான் உங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன்.
8 ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய் அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.
9 பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.
10 அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.
11 ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.
13 யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.
14 ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.
15 துர்ச்சனரோடு மகா தீவினைசெய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.
16 நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.
17 பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18 அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத்தெரியக்காட்டினீர்.
19 மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
20 சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
21 ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:
22 இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.
23 அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 12

1 கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
2 நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
3 கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு கொலைநாளுக்கு அவர்களை நியமியும்.
4 எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
5 நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?
6 உன் சகோதரரும், உன் தகப்பன்வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.
7 நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
8 என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல எனக்காயிற்று: அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.
9 என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.
10 அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
11 அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
12 கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.
13 கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும்பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.
14 இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.
15 அவர்களை நான் பிடுங்கிப்போட்டபிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள் தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள் தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன்.
16 அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள்.
17 கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 13

1 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
2 நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
3 இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: அவர்
4 நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.
5 நான் போய் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்திலே ஒளித்துவைத்தேன்.
6 அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
7 அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
9 இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
10 என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
13 அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,
14 பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
15 நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
16 அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
17 நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
18 நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம்.
20 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களை பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
21 அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
23 எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
24 ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.
25 நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன்.
27 உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.
அதிகாரம் 14

1 மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
2 யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
3 அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
4 தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
5 வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்.
6 காட்டுக்கழுதைகள் மேடுகளில்நின்று வலுசர்ப்பங்களைப்போல், காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.
7 கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
8 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
9 நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும்.
10 அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார், ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
11 கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.
13 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
15 ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்
18 நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
19 யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
20 கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
21 உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.
22 புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
அதிகாரம் 15

1 கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,
2 எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
3 கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.
5 எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதபிப்பார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்?
6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.
8 கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.
9 ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
11 உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாக சொல்லுகிறேன்.
12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
13 உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
14 நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.
15 கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடையமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
18 என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
19 இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20 உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
அதிகாரம் 16

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2 நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.
3 இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
4 மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
5 ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
7 செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
8 நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.
9 ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
10 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,
11 நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
12 நீங்கள் உங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே, இதோ உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
13 ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
14 ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,
15 இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
17 என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
18 முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
20 மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
21 ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
அதிகாரம் 17

1 யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
2 உயர்ந்த மேடுகளின்மேல், பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
3 வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும் உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.
4 அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
8 அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
11 அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.
12 எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.
13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
14 கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
15 இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.
16 நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.
17 நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும், தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
18 நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
19 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
20 அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
21 நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
22 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
23 அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
24 நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,
25 அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
26 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான சீமையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்தகனங்களையும் பலிகளையும், போஜனபலிகளையும் தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்,
27 நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 18

1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
2 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
3 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.
4 குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.
5 அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
7 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
8 நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.
11 இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
12 ஆனாலும் அவர்கள்: அது கூடாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.
13 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.
14 லீபனோனின் உறைந்த மழை வயல் வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்து போகிறதுண்டோ?
15 என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.
16 நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிற எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.
17 கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.
18 அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
19 கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.
20 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.
21 ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.
22 நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.
23 ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள், உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.
அதிகாரம் 19

1 கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
2 கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.
3 நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
4 அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும்,
5 தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.
6 ஆகையால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்.
7 அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி, அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்து,
8 இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.
9 அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
10 உன்னோடேகூட வந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,
11 அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
12 இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.
13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
14 பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருத்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:
15 இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அதிகாரம் 20

1 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,
2 எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.
3 மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார்.
4 மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும் உன் எல்லாச் சிநேகிதரையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.
5 இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.
6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த உன் சிநேகிதர் யாவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவீர்கள் என்று சொல்லுகிறார் என்றான்.
7 கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.
8 நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.
9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.
10 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.
11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
12 ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
13 கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.
14 நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
15 உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
16 அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.
17 என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
18 நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
அதிகாரம் 21

1 சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
2 நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,
3 எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
5 நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி,
6 இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளைநோயால் சாவார்கள்.
7 அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.
8 பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.
10 என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.
11 யூதா ராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
12 தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு, அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
அதிகாரம் 22

1 கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:
2 தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
3 நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.
4 இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
5 நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய், ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.
7 சங்காரகாரரை அவரவர் ஆயுதங்களோடுகூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி அக்கினியிலே போடுவார்கள்
8 அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
9 அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்களென்று சொல்லுகிறார்.
10 மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜநந பூமியைக் காண்பதுமில்லை.
11 தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,
12 தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான், இந்ததேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
14 அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல் அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!
15 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?
16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.
18 ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
19 ஒரு கழுதை புதைக்கப்படுகிறவண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.
20 லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு, உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.
21 நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.
22 உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய்.
23 லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!
24 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்;
26 உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
27 திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
28 கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?
29 தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
30 இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 23

1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.
4 அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
6 அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
7 ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,
8 இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.
10 தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது, அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.
11 தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.
14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.
15 ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
17 அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
18 கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
19 இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.
20 கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.
21 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
22 அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
23 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
24 யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
26 எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.
27 என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள்.
28 சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31 இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
32 இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.
34 கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
35 கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.
36 ஆனால் கர்த்தரால் வரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.
37 கர்த்தர் உனக்கு என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.
38 நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே, கர்த்தரின் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே.
39 ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும் எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு,
40 மறக்கப்படாத நித்திய நிந்தையையும் நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 24

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
2 ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.
3 கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
5 நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.
6 அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.
7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
8 புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,
9 அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,
10 அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 25

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2 அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும், எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி:
3 ஆமோனின் குமாரனாகிய யோசியாவின் பதின்மூன்றாம் வருஷம்துவக்கி இந்நாள்மட்டும் சென்ற இந்த இருபத்துமூன்று வருஷமாகக் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிற்று; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள்.
4 கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.
5 அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாத வழியையும் உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து,
6 அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன்.
7 நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
8 நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,
9 இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
10 மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.
12 எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,
13 நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குதக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.
15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
16 இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.
17 அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.
18 எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும் அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும் அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.
19 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும் அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா ஜனத்துக்கும்,
20 கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும் காசாவுக்கும், எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,
21 ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,
22 தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
23 தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,
24 அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
25 சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும் மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
26 வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகலதேசத்து ராஜாக்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.
27 நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.
28 அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.
29 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
30 ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
31 ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
32 இதோ, ஜாதிஜாதிக்குத் தீமைபரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும்.
33 அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.
34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
36 தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.
37 அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.
38 அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
அதிகாரம் 26

1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
2 நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
4 நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,
5 நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,
6 நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
7 எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
8 சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
9 இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
10 யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
11 அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
12 அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
13 இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.
14 நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.
15 ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
16 அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
17 தேசத்திலே மூப்பரானவர்களில் சிலர் எழும்பி சபையாகிய ஜனங்களை நோக்கி:
18 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
19 அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
20 கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
21 யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
22 அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்
23 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.
24 ஆனாலும் எரேமியாவைக கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.
அதிகாரம் 27

1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு, உண்டான வார்த்தை:
2 கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,
3 அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
4 அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,
5 நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
6 இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.
7 அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.
8 எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள்.
10 நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
11 ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
13 பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?
14 நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
15 நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
16 மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
17 அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?
18 அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்திலே கர்த்தருடைய வார்த்தை இருந்தால், கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான பணிமுட்டுகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு அவர்கள் சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடட்டுமே.
19 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,
20 எடுக்காமல் விட்ட சகல தூண்களையும் கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
21 கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
22 நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
அதிகாரம் 28

1 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
3 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.
4 யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
5 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:
6 ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
7 ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
8 பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும் யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
9 சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
10 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
11 பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.
12 அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
13 நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.
14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.
16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.
அதிகாரம் 29

1 எகொனியா என்னும் ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,
2 எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன சகல ஜனங்களுக்கும் எழுதி,
3 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்:
4 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,
5 நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
6 நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
7 நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.
8 மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
9 அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
14 நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.
16 ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும் உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,
17 இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18 அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும் ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20 இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
21 என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
22 பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
23 அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.
24 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:
25 நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
26 இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்கிறவகினாகிய எந்த மனுஷனையும் நீர் காவலறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.
27 இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்துகொள்ளாமற்போனதென்ன?
28 இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
29 இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.
30 ஆதலால் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:
31 சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமாயாவைக்குறித்து கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால்,
32 இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
அதிகாரம் 30

1 கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
3 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்ன வார்த்தைகளே.
5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
6 ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
7 ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.
9 தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
10 ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
11 உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.
13 உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களும் இல்லை.
14 உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
15 உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
16 ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
17 அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
19 அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை..
20 அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.
21 அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22 நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
23 இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
24 கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.
அதிகாரம் 31

1 அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
4 இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
5 மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அனுபவிப்பார்கள்.
6 எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.
7 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.
8 இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும் சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.
9 அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பீராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
10 ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
11 கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
13 அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
14 ஆசாரியரின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.
17 உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
19 நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்து கொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்.
20 எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
21 உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
22 சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.
23 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.
24 அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.
25 நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
26 இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.
27 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும், மிருகவித்தினாலும் விதைப்பேன்.
28 அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள் பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.
30 அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
31 இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
35 சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
36 இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால் அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்:
37 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
38 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.
39 அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரெப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாகச் சுற்றிப்போம்.
40 பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.
அதிகாரம் 32

1 நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கைபோட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான்.
3 ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப்பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,
4 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல், பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும் அவன் கண்கள் இவன் கண்களைக்காணும்.
5 அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்துவைத்தான்.
6 அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
7 இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லுூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்லுவான் என்று உரைத்தார்.
8 அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
9 ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.
10 நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு,
11 நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
12 என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய தேரியாவின் மகனான பாரூக்கினிடத்தில் கொடுத்து,
13 அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாரூக்கை நோக்கி:
14 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.
15 ஏனெனில் இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
16 நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
17 ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
18 ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
19 யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
20 இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,
21 இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி,
22 அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாயிருகிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.
23 அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்.
24 இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
25 கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
26 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
28 ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.
30 இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்து வந்தார்கள் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளின் செய்கையினாலே எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31 அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள் முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாகவும், நான் அதை என் முகத்தைவிட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது.
32 எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.
33 முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள்.
34 அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.
35 அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.
36 இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
37 இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.
38 அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
39 அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
40 அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,
41 அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.
42 நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
43 மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.
44 பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப்பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
அதிகாரம் 33

1 எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இரண்டாந்தரம் உண்டாகி, அவர்:
2 இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
4 எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:
5 இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.
6 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
7 நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,
8 அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
9 நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
10 மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,
11 இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
12 மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க் கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
13 மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
14 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
15 அந்நாட்களிலும் அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
16 அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
17 இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.
18 தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
19 பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
20 குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
21 அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
22 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
23 பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,
24 கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?
25 வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,
26 அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
அதிகாரம் 34

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.
3 நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.
5 சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
6 இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.
7 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.
8 ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி,
9 ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமின் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டாயிற்று.
10 ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களுக்கும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
11 ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.
12 ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தையுண்டாகி, அவர்:
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,
14 நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.
15 நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.
16 ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.
17 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
19 கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து,
20 நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
21 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
22 இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
அதிகாரம் 35

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
2 நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.
3 அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
4 கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,
5 திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன்.
6 அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,
7 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
8 அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
9 நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும் ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
10 நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.
11 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
12 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்,
13 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதிலையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
15 நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.
16 இப்போதும் ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினாலும்.
17 இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
18 பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
19 ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அதிகாரம் 36

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
2 நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.
3 யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.
4 அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.
5 பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.
6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
7 ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான்.
8 அப்படியே நேரியாவின் குமாரனாகிய பாருக்கு அந்தப் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஆலயத்தில், கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
9 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது.
10 அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான்.
11 சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,
12 அவன் ராஜாவின் அரமனைக்குப் போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானும், சாப்பானின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
13 பாருக்கு ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளை வாசிக்கையில், தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான்.
14 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக் கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால் நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.
15 அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
16 அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
17 அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
18 அதற்கு பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
19 அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
20 சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
21 அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.
22 ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது.
23 யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
24 ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
25 எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்க வேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களுக்கு அவன் செவிகொடாமல்,
26 பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.
27 ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
28 நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
29 மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்தத் தேசத்தை அழித்து அதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
31 நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
32 அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.
அதிகாரம் 37

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
2 கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.
3 சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
4 அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும் போக்குமாயிருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
5 பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
6 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,
7 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.
8 கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
9 கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம்போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
10 உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
11 பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது,
12 எரேமியா அவ்விடத்தைவிட்டு, ஜனத்தின் நடுவே ஜாடையாய் விலகி, பென்யமீன் தேசத்துக்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்.
13 அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
14 அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
15 அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.
16 அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
17 பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
18 பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?
19 பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?
20 இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
21 அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.
அதிகாரம் 38

1 இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
2 இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
3 எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.
4 அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
5 அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.
6 அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
7 அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
8 அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:
9 ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
10 அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே; கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
11 அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,
12 எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்: எரேமியா அப்படியே செய்தான்.
13 அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்.
14 பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
15 அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.
16 அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.
17 அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
18 நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
19 அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.
20 அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.
21 நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
22 இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள்தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனை செய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள்.
23 உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப் போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
24 அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை.
25 நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,
26 நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம் பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான்.
27 பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.
28 அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
அதிகாரம் 39

1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.
2 சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.
3 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
4 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.
5 ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.
6 பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,
7 சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்.
8 கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.
9 நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.
10 காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
11 ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:
12 நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.
13 அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,
14 எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.
15 இதுவுமல்லாமல் எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
16 நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
17 ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.
18 உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
அதிகாரம் 40

1 பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
2 காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
3 தாம் சொன்னபடியே கர்த்தர் வரப்பண்ணியுமிருக்கிறார்; நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது.
4 இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
5 அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.
6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.
7 பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
8 அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
9 அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
10 நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
11 மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,
12 எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்
13 அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,
14 உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்' ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.
15 பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.
16 ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
அதிகாரம் 41

1 பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.
2 அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
3 மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.
4 அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
5 தாடியைச் சிரைத்து, வஸ்திரங்களைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் தூபவர்க்கங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள்.
6 அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
7 அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.
8 ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
9 இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.
10 பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.
11 நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.
12 அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.
13 அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,
14 இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.
15 நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.
16 கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு.
17 பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால்.
18 தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.
அதிகாரம் 42

1 அப்பொழுது எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர் முதல் பெரியோர்மட்டும்மான சகலஜனங்களும் சேர்ந்துவந்து.
2 தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும் செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்.
3 உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்
4 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.
5 அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லாவார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர்.
6 அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.
7 பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.
8 அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகானானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து,
9 அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,
10 நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.
11 நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,
12 அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும்,
14 நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,
15 யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.
16 நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.
17 எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18 என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும். நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
19 யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக் குறித்துச் சொன்னாரன்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.
20 உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.
21 நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள்.
22 இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில் தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.
அதிகாரம் 43

1 எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லாவார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,
2 ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.
3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோலனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.
4 அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.
5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரத்திகளையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,
6 கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,
7 கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.
8 தக்பானேசிலே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:
9 நீ உன் கையிலே பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா ஜனங்களுக்கு முன்பாக அவைகளைத் தக்பானேசில் இருக்கிற பார்வோனுடைய அரமனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணிலே புதைத்து வைத்து,
10 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.
11 அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.
12 எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.
13 அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
அதிகாரம் 44

1 எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:
2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.
3 இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்கு தூபங்காட்டவும், ஆராதனை செய்யவும் போய் எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை.
4 நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.
5 ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள்.
6 ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப் போயிற்று.
7 இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து,
8 உங்களை வேரற்றுப்போகப்பண்ணுவதற்காகவும், நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்கவந்த எகிப்துதேசத்திலே அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டுவானேன்?
9 யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும், உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ?
10 அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.
11 ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,
12 எகிப்து தேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள்.
13 நான் எருசலேமை தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன்.
14 எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும் வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.
15 அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக:
16 நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
17 எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
18 நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்.
19 மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.
20 அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி:
21 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.
22 உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக் கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.
23 நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.
24 பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.
26 ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
27 இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.
28 ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.
29 நான் இவ்விடத்தில் உங்களை தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அதிகாரம் 45

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,
2 பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
3 நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.
4 இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும்.
5 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.
அதிகாரம் 46

1 புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
2 எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
3 கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.
4 குதிரைவீரரே, குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
5 அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.
7 பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
8 எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
9 குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
10 ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.
11 எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.
12 ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.
13 எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:
14 ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.
15 உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
16 அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.
17 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
18 பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
19 எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.
20 எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
21 அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
22 அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
23 எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
24 எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,
26 அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.
28 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
அதிகாரம் 47

1 பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
2 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகி தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின் மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின் மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.
3 அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
4 பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.
5 காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்..
6 ஆ கர்த்தரின் பட்டயமே, எந்த மட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.
7 அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.
அதிகாரம் 48

1 மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
2 எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத்தொடரும்.
3 பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.
4 மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.
5 லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிறதினால் உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.
6 உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
7 நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.
8 பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.
9 மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.
10 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
11 மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.
12 ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
13 அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.
14 நாங்கள் பராக்கிரமசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
15 மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
16 மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
17 அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
18 தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்..
19 ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
20 மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
21 சமனான பூமியாகிய ஓலோனின் மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
22 தீபோனின்மேலும், நேபோவின் மேலும், பெத்திப்லாத்தாயீமின் மேலும்,
23 கீரியாத்தாயீமின் மேலும், பேத்கமூலின்மேலும், பெத்தெமெயோனின்மேலும்,
24 கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.
25 மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.
27 இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.
28 மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்..
29 அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
30 அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.
31 ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.
32 சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.
33 பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
34 எஸ்போன்துவக்கி ஏலெயாலே மட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஓரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.
35 மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
36 ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படி தொனிக்கும்.
37 தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.
38 மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்
40 இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.
41 கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.
42 மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.
43 மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
44 திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
45 வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினிஜுவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப் தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.
46 மோவாபே உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
47 ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.
அதிகாரம் 49

1 அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
2 ஆகையால், இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப் போவான்.
4 எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமை பாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்கு கரைந்துபோகிறது.
5 இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை.
6 அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?
8 தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன் மேல் வரப்பண்ணுவேன்.
9 திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
10 நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.
11 திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.
13 போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன்.
15 இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டைபண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.
16 கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.
18 சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.
19 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
20 ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.
21 அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.
22 இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.
23 தமஸ்குவைக் குறித்துச் சொல்வது; ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்து போகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை.
24 தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
25 சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்ப விடப்படாமற்போயிற்றே!
26 ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
27 தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.
28 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்.
29 அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.
30 காத்சோரின் குடிகளே, ஓடி தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.
31 அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு வாசல்களுமில்லை, தாழ்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடு மாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 ஆத்தோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே, தங்குவதுமில்லையென்கிறார்.
34 யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
35 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,
36 வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.
37 நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
38 என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதிகாரம் 50

1 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்:
2 பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மேராதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.
3 அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.
4 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5 மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
6 என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்து விட்டார்கள்.
7 அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
8 பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.
9 இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
10 கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
12 உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
13 கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
14 நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,
15 அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
16 விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திருப்பிக் கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
17 இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
18 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
19 இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
20 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22 தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
23 சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாப்போயிற்று!
24 பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
25 கர்த்தர் தம்முடைய ஆய்தசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
26 கடையாந்திரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
27 அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
28 நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.
29 பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிகட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.
30 ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31 இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
32 இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும்.
33 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
34 அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
35 பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
36 பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள் மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
37 பட்டயம் அதின் குதிரைகள் மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
38 வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
39 ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.
40 தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
41 இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
42 அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்.
43 அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
44 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
45 ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.
46 பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
அதிகாரம் 51

1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,
2 தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.
3 வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.
4 குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலைசெய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
5 அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.
6 நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.
8 பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
9 பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.
10 கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
11 அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.
12 பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.
13 திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
14 மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப் போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம் பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.
15 அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
16 அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.
17 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
18 அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்..
19 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
20 நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
21 உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.
22 உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.
23 உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
24 பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
27 தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
28 மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
29 அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.
30 பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
31 கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும்; துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
32 அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
33 பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
34 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
35 எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன் மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.
36 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
37 அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல்போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.
38 ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கங்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
39 அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
40 அவர்களை ஆட்டுக்குட்டிகளைப் போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன்.
41 சேசாக்கு பிடியுண்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரம்மிப்பானது எப்படி?
42 சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
43 அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.
44 நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.
45 என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.
46 உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.
47 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.
48 வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
49 பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.
50 பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
51 நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.
52 ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.
53 பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
54 பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
55 கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.
56 பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.
57 அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
58 பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவாகவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
59 பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.
60 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.
61 எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
62 கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித்தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி
63 நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,
64 இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.
அதிகாரம் 52

1 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.
2 யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
3 எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
4 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
5 அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
6 நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல் போயிற்று.
7 நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.
8 ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.
9 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.
10 பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
11 சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளைப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.
12 ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.
13 அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
14 காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
15 ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
16 ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
17 கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.
18 செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.
19 பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.
20 சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.
21 அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.
22 அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.
23 தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
24 காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
25 நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
26 அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.
27 அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
28 நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,
29 நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள்.
30 நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.
31 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
32 அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
33 அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.
34 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.